TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை எவ்வளவு?

திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2012 ஆம் ஆண்டு டிச. 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று பள்ளி இறுதி வகுப்புத் தவறியவர்களுக்கு மாதம் ரூ. 100, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 200, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 300 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000-க்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவு செய்து 2016 ஆம் ஆண்டு டிச. 31-ஆம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமானவரி உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகைப் பெரும் காலத்தில் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருக்கக் கூடாது. தொலைத்தூரக் கல்வியில் படிக்கலாம். முழுமையாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  விண்ணப்பம் பெற்று அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் 2017 பிப். 28-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

உதவித்தொகை பெறுவோரின் கவனத்துக்கு: மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment