TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்: புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தின்கீழ் வரும் நாள்களில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், மத்திய அரசால் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஏற்கெனவே அமலில் இருந்த பிரதமரின் ரோஜ்கர் யோஜனா திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்புகள் உருவாக்குதல் திட்டம் ஆகியவற்றை இணைத்து இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இதில், காதித் துறையும், கிராமத் தொழிற்சாலைகள் ஆணையமும் முகமையாக உள்ளன.
2012-13ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் புதிய வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. 2012-13ஆம் ஆண்டு காலத்தில், 4.28 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 2013-14ஆம் ஆண்டு காலத்தில் 3.78 லட்சமாக குறைந்தது. இந்த எண்ணிக்கை, 2014-15ஆம் ஆண்டு காலத்தில் 3.57 லட்சமாகவும், 2015-16ஆம் ஆண்டில் 3.23 லட்சமாகவும் குறைந்தது.
2016-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 1.87 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தில்லியில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வரும் நாள்களில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், 2016-17ஆம் ஆண்டு காலத்துக்கு 55 ஆயிரம் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1,139 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால், 4.25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
பிரதமரின் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல் திட்டத்தை மேம்படுத்துவதற்கு, இணையம் மூலம் தொழிலை பதிவு செய்யும் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் வரும் நாள்களில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்றார் கல்ராஜ் மிஸ்ரா.

No comments:

Post a Comment