இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள கோயில்களில் காலியாகவுள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர், நிலை-3-இல் 29 காலியிடங்களும், செயல் அலுவலர், நிலை-4 இல் 49 காலியிடங்களும் உள்ளன. இந்தப் பதவியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். செயல் அலுவலர், நிலை-3-க்கான தேர்வினை எழுதுவோர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்காம் நிலைக்கு எழுதுவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
இந்த இரு பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 24-ஆம் தேதி கடைசி. எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆம் தேதியாகும். இந்த எழுத்துத் தேர்வுக்கென 32 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே விண்ணப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இரண்டு விண்ணப்பங்களிலும் ஒரே தேர்வு மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-சீர்மரபினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002-ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment